28 மார்ச், 2010

சுடலைக்குருவியை

பரந்த வயல்களில்
விளைந்த நெல்லின்
வாசம் நாசியில் ஏறும்
அந்தச்சுகம்
நிரந்தரமாக தவறிப்போனது
எங்கள் ஏக்கங்களில் ஒன்றாக...

வம்பளந்த தேர்முட்டிகள்
மனித இனமே வற்றிவிட்டதாய்
கண்ணீர் வடித்து வரவுக்காய்
காத்திருக்க...

பனையும் தென்னையும்
பதநீரெடுத்து சுவைக்க ஆளில்லாமல்
மடியின் வலியில்
துடிதுடித்து துக்கம் கொண்டாட...

தும்பிகளும் இளம்தென்றலும்
அந்தி மலரின் அற்புதவாசனையும்
பசும்புற்றறையான கோவில்வீதிகளில்
பதிந்த கால்களும்
இனிப் பழங்கதைகளாக...

எங்கோ கேட்கும்
சுடலைக்குருவியை
இனி எப்போதுமே
கேட்கமுடியாது போக
இயந்திர ஓலிகளே
எம்மைக் கட்டுப்படுத்த...

அந்தியில் சூரியனும்
அவன் பொன் தகடான கோலமும்
உங்களைப் பிரிந்து
அழியில் மூழ்கேன் என அவன்
அடம்பிடித்த காட்சியும்
என்றும் மனதில்
நிரந்தரமாய்
இடம்பிடிக்க...

ஆற்றில் தொலைத்துவிட்ட
சுந்தரருக்கு குளத்தில்
கிடைத்தது
எங்களுக்கு கிடைக்கவில்லையே
என்கின்ற எக்கத்தில்...

நாட்களுடன் சண்டையிட்டு
கனவுகளை அடைகாத்துக் கொள்ள
பகலிலே கண்மூடி
நித்திரைக்குத் தவமிருக்கும்
நாங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக