24 பிப்ரவரி, 2017

வணக்கம்!

எனது புதிய இணையத்தளம்   karainagaran.com . அங்கே தாங்கள் வந்து இலவசமாக எனது நாவல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
தியாகலிங்கம்

4 டிசம்பர், 2011

வானத்தால் குதிக்கும் வடலிகள்

http://www.keetru.com, இருக்கிறம், ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டது.

அகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று கதை பேசும், கரையோரத்துக் காவலனான பிள்ளையார் கோயில். இருள் கொண்ட நேரத்திலும் இரகசியம் பேசாத அலைகளின் கரைகாணும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள். அன்றொருநாள் சுனாமியாய் வந்ததிற்காய் நிரந்தரமாய்க் கோபித்துக் கொள்ளாத மனிதர்கள் என்றும்போல் இன்றும் மறந்து மன்னித்து, அவளிடமே சென்று சிலாகித்து கால் கழுவிவரும் முறியாத உறவுகள். ஆயுள் முற்றி ஆவிவிடும் தருணத்தில் வந்துவிட்ட அன்றைய நாளை உணர்ந்து கொண்ட வாகனங்களின் அவசரம். யாழ் செல்லும் சொகுசு வண்டிகளின் அணிவகுப்பு இருகரைகளையும் அடைத்துக் கொண்டதால் சாலைப் போக்குவரத்தில் வாகனங்கள் மூச்சுவிட முடியாத அவதி. நிறுத்தி இருக்கும் சொகுசு வண்டிகளை அடையாளம் கண்டு அவசரமாய் வந்து ஏறிக்கொள்ளும் பயணிகளின் பரபரப்பு.

'சீசைட் பிள்ளையார் கோயிலும்’ அதைச் சுற்றி போட்டிக்கு நிற்கும் சொகுசு வண்டிகளும் யாழ்ப்பாணத்தை மோப்பம்பிடிக்க வெறிகொண்டவர்களுக்கு திறவுகோலாகிவிட்ட ஒன்று. ஆயிரமாயிரமாய்க் கொடுத்து ஆகாயத்தால் பறந்தவர்களுக்கு ஆயிரத்தோடு தரையால் போகும் அரிய வரப்பிரசாதம். நானும் மோப்ப நாயாக... எப்போதோ பார்த்ததை, சடுதியாக இழந்ததை மீண்டும் பார்த்து விடவேண்டும் என்கின்ற வெறியோடு... ஏற்கனவே அனுமதிசீட்டைப் பெற்றிருந்த ஒரு சொகுசு வண்டிக்குள் அவசரமாக என்னையும் திணித்துக் கொண்டேன்.

உள்ளே ஊதுபத்தியும் பக்திப்பாடலும் நான் மறந்து போய்விட்ட தடங்களை மீண்டும் ஞாபகப்படுத்த, நல்லூர்க் கந்தனும் எங்கள் ஊர் முருகனும் மீண்டும் என்கண்ணில் நிழலாட, மாண்டு போன அந்த இன்பங்களை எண்ணி மீண்டும் ஒரு பெருமூச்சு என்னையும் அறியாது புறப்படலாயிற்று. முன்னுக்கு இருந்த பிரயாணி தானே முதலில் பஸ்சில் கால் வைத்தவர் என்பதை சந்திரனில் கால் வைத்த பெருமையில்கூறி தான் சரியான வண்டியில் ஏறிவிட்டதாக உறுதிப்படுத்தும் வகையில் கைத் தொலைபேசியில் தனது முகவருக்கு திடமாக கூறிக்கொண்டு இருந்தார். கறுப்புக் கண்ணாடி கடல்காற்றை உள்ளே விடமாட்டேன் என்று அடம்பிடிக்க புழுக்கம் வியர்வை முத்துக்களை பிரசவிக்க, பொறுக்க முடியாதவனாய் பஸ்சைவிட்டு இறங்கி வெளியே நின்றேன். தெருவையும் கடலையும் பிரித்து நின்ற தண்டவாளங்கள் நாட்டில் இருக்கும் இரு இனங்களைப் போன்று இணையவும் முடியாமல் பிரியவும் முடியாமால் சாமாந்தரப் பயணிப்பில் சலிப்புக் கொண்டாலும் கொள்ளாதவர்களாக...

சிறிது நேரத்தில் ஒரு குடும்பமும் வந்து அதே பேருந்தில் ஏறினார்கள். முப்பது வயது மதிக்கத் தக்க அந்த இளைஞ்னை நான் ஒரு முறை பார்த்தேன். சுருட்டப்பட்ட முடி, காதணி கொண்ட காதுகள், மெல்லிய வென்னியனில் " Swiss man" என எழுதப்பட்ட அடையாளம், அணிந்து இருந்த டெனிமின் இறுகிய பிடிப்பு, அவன் காலில் விலை மதிப்பான காலணி, கையிலே சுவிஸ் கடிகாரம், கழுத்திலே தங்கச் சங்கிலி, முதுகிலே பெரிய பையொன்றுமாக, சோளக்காட்டில் புகுந்த யானையாக அவன் உள்ளே போய்க் கொண்டு இருந்தான். அவனைத் தொடர்ந்து அவனது குடும்பமும் அவசரமாக உள்ளே சென்று கொண்டு இருந்தது. அந்தக் குடும்பத்தைத் தொடர்ந்து நானும் நேரம் நெருங்குவதால் பிரிய முடியாத கடல் காற்றிற்கு பிரியாவிடை கொடுத்து வண்டியில் ஏறினேன். வண்டிக்குள் சென்ற இளைஞன் தனது பொதியை வன்முறையைப் பாவித்து அடைந்து வைத்துவிட்டு நின்று நெளிந்தான். பின்பு 'ஏசியப் போடுங்கண்ண" எனக் கத்தினான். முன்னுக்கு இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. நடத்துனர் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு அனுமதிப் பத்திரங்களைச் சரிபார்ப்பதில் மீண்டும் ஒன்றிப் போனார். வருபவர்களும், வண்டிக்குள் ஏறுபவர்களும், ஆசனத்தைச் சரிபார்ப்பவர்களும், பிழையான வண்டியில் ஏறி இருந்ததிற்காய் திருப்பி நடத்துனரால் அனுப்பப் படுபவர்களுமாய் அலங்கோலப்படும் சிறிய சந்தைக்குள் அகப்பட்டதான உணர்வில் நான் எதுவும் செய்யமுடியாதவனாய் ஆசனத்தில் அமர்ந்து இருந்தேன்.

'இது ஒரு பிச்சைக்காற நாடு எதுவும் ஒழுங்காக நடக்காது. வெள்ளைக்காறன்ர நாடு எண்டாலும் நாடுதான். எல்லாம் நேரத்துக்குச் சொல்லி வைச்சதுமாதிரி நடக்கும்." அந்த இளைஞன் பக்கத்தில் இருந்தவரோடு பெரிதாக கதைத்தான். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் அவனைக் காட்டி கண் சைகை செய்து வாயைப் பிதுக்கிக் காட்டினார். நானும் அவருக்கு கண்பாசை காட்டிவிட்டுப் பேசாது இருந்தேன்.

பக்கத்து ஆசனத்தில் இருந்தவர் என்னை விடுவதாய் இல்லை. 'பார்த்தீங்களே சுவிஸ்காறர் நெஞ்சிலேயே எழுதிக் கொண்டு வந்து இருக்கிறார். காதில தொங்கட்டான், கழுத்தில தங்கச் சங்கிலி, குடும்பியும் வைச்சிருந்தா ஆணைப் பெண்ணாக்கி, பெண்ணை ஆணாக்கி இருக்கலாம். அற்பனுக்கு பவுசு வந்தமாதிரியெல்லே இந்த ஆட்டம் எல்லாம் இருக்குது"

நான் சிரித்தேன்.

'என்ன நீங்கள் வாய் துறக்கிறியள் இல்லை." பொறுக்க முடியாதவராய் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

'இல்ல மௌனம் கனகராசி எண்டுவினம். எங்களுக்கு இருக்கிற சோலிக்கே விடைதெரியாது. எதுக்கு மற்றைவையின்ர சோலி எண்டுதான்...?"

'அது நல்ல புத்திதான். நானும் அப்பிடி இருக்கோணும் எண்டுதான் நினைக்கிறவன். ஆனா அப்பிடி இருக்க விடுகிறான்கள் இல்லைத் தம்பி. என்ர வீட்டில ஒருத்தன் குந்திக் கொண்டு இருக்கிறான். வேலை வெட்டிக்குப் போவென்ரா எண்டு கேட்டா வெளிநாடு போறதுதான் என்ர வேலை எண்டு சொல்லிக் கொண்டு, ஊரளந்து கொண்டு இருக்கிறான். இப்பிடி யாரும் நெஞ்சில எழுதிக்கொண்டு வந்தா அவனுக்கெல்லாம் பித்தம் தலைக்கேறி விசர் பிடிச்சிடும். பிறகு தெருத்தெருவா அலைஞ்சு திரிவான். போனவங்கள் போனவங்களாகவே இருக்காமல் ஏன் திரும்பி வந்து இருக்கிறதுகளையும் குழப்போணும், சொல்லுங்கோ தம்பி?"

எனக்கு அவர்கேட்ட கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை. நானே குற்றவாளியாக இருந்துகொண்டு தீர்ப்பு சொல்ல முடியுமா என்பது புரியவில்லை. என்றாலும் அவரைச் சமாளிக்கும் விதமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவனாக,

'நீங்கள் சொல்லுறதும் உண்மைதான் அண்ணை. அங்க கோப்பை கழுவிகினமோ கக்கூசு கழுவிகினமோ இங்கை வரேக்கையாவதும் உந்த நெஞ்சில எழுதுறதையும் நெளிப்பு காட்டுறதையும் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் தான். உங்கட ஆதங்கத்திலையும் சத்தியமா நியாயம் இருக்கத்தான் செய்யுது. ஆனா மனிசர் எண்டா இப்பிடித்தான் நாலுவிதமாயும் இருப்பினம் அண்ண. ஒண்டு ஒழுங்காப் போகும் இன்னொண்டு குறுக்கால இழுத்துக் கொண்டு போகும். அதுதானே இயற்கை."

'அதுவும் செரிதான் தம்பி. இவையெல்லாம் கஷ்ரப்பட்டுத்தானே காசு உழைக்கினம். அதைக் கவனமாகத்தானே செலவழிக்கோணும். அதைவிட்டிட்டு மெசினில அடிச்சாறமாதிரி கடனுக்குக் காட்டில எடுத்து விளையாட்டுக் காட்டினால் வாயப்பிளக்கிற அப்பாவிகளுக்கு பைத்தியம் பிடிக்கத்தானே செய்யும். அந்த நேரம் நடந்து திரிஞ்ச தூரம் எல்லாம் இப்ப பஸ்சில போகக்கூட அவைக்கு அவமானமாய்ப் போயிட்டுது. ஓட்டோவும் ரக்சி வேணும் எண்டெல்லே நிக்கினம். இவங்கட ஆட்டத்தைப் பார்த்துப்போட்டு தோட்டம் துறவுக்குப் போக வேண்டியதுகள் எல்லாம் பகல்கனவு கண்டுகொண்டு திரியுதுகள். கேட்டா வெளிநாடு போறதுதான் எங்கட வேலையெண்டுதுகள். அவர் மீண்டும் புலம்பினார்.

'அண்ண ஏசியக் கூட்டுங்கோ" அந்த இளைஞன் கத்தினான். பக்கத்தில் இருந்தவர் கண்ணை விரித்து தனது அதிருப்தியைக் காட்டினார். எதுவும் புரியாத சிங்களச்சாரதி இன்னும் அதிகமாக வேகத்தைக்கூட்டி பயணிகளை இருக்கையில் இருந்து எழாதவாறு பார்த்துக் கொண்டான்.

'றோட்டே இல்லை, ஐயோ என்ன ஓட்டம் ஓடுறான். இதுக்குத்தான் இந்த நாட்டுக்கு எல்லாம் வரக்கூடாது எண்டுறது." என்றான் அந்த இளைஞன்.

'ம் இவரையெல்லாம் யாரோ நிறைகுடம் வைச்சுக் கூப்பிட்டமாதிரி. தங்கட பவுசக் காட்ட இங்க வந்திட்டு... வடலிக்க இருந்து போனவங்கள் எல்லாம் ஏதோ வானத்தில இருந்து குதிச்சமாதிரிக் கதையப்பார். ஐயோ இவனைமாதிரி எத்தனைபேர் வரப்போகினமோ?" பக்கத்தில் இருந்தவர் அங்கலாயித்துக் கொண்டார்.

சிலாபத்தில் பேருந்து உணவு இடைவேளைக்காக நின்றது. அவசரமாக தனது குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு இறங்கிய அந்த இளைஞன் போன வேகத்தில் 'உதுக்கையும் மனிசன் சாப்பிடுவானே?" எனக் கத்தியவண்ணம் திரும்பி வந்து பேருந்தில் ஏறிக் கொண்டான்.

நானும் பக்கத்தில் இருந்தவரும் இறங்கிச் சென்று றோள்ஸ் வேண்டி பிளேன்ரீயுடன் சாப்பிட்டுவிட்டு, ஆறுதலாக மீண்டும் பேருந்திற்கு வந்தோம். அந்த இளைஞனின் குடும்பமும் அவனுக்காக வெளிநாட்டு பிஸ்கற்றையும் கடித்து போத்தல் நீரையும் பருகிக் கொண்டு இருந்தார்கள். பக்கத்து இருக்கைக்காறர் கண்ணைக் காட்டினார். எனக்கு அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

முருகண்டியில் பேருந்து நின்றபோது நித்திரையின் மடியின் நின்மதி கண்டு கொண்டு இருந்தேன். அந்த நின்மதியை துறந்து இயற்கையின் அவதியை தணிக்க வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் வெளியே செல்ல வேண்டி இருந்தது. அவசரஅவசரமாக அநாவசியமானதை இறைத்துவிட்டு ஒரு தேனீரை வேண்டி வந்து அருந்துவதற்கு அமர்ந்தபோது அந்தக் குடும்பம் பிஸ்கேற்றை விட்டு றோள்ஸ்சுக்கு மாறி இருந்ததைப் பார்க்க முடிந்தது. பசிச்சா கறிவேண்டாம் நித்திரை வந்தால் பாய் வேண்டாம் என்று அம்மா சொல்லும் பழமொழியின் அர்த்தம் எனக்கு அப்போது புரிந்தது.

சிறிது நேர நித்திரை மயக்கத்தில் பேருந்து ஓமந்தையை வந்தடைந்திருந்தது. ஒரு காலத்தில் தவம் கிடந்து கடந்த தரைப்பாதையின் வாசலாக, மனிதம் கேள்விக்குறியாக்கப்பட்ட கணங்களாக, ஆண்டியும் அரசனும் கைகட்டி வாய்பொத்தி கௌரவத்தைக் கைவிட்டு கடந்தபாதையான ஓமந்தையின் முகம் இப்போது சற்று மாறி இருந்தது ஒருவித சௌகரியத்தைத் தந்தது.

என் நினைவுகள் ஐடி என்னும் சொற்கேட்டு நெருப்பு பட்ட மசுக்குட்டியாக அடங்கிப் போயிற்று. ஒரு இராணுவவீரன் எல்லோரிடமும் அடையாள அட்டையைப் பார்த்துக் கொண்டு வர, நானும் எனது அடையாளமாக கடவுச்சீட்டைக் காட்டினேன். பக்கத்தில் இருந்தவர் தனது அடையாள அட்டையை காட்டிவிட்டு கறுப்பு கண்ணாடியோடே நிரந்தரமாக வெளியே பார்க்கத் தொடங்கி இருந்தார். என்னிடம் இருந்த போஸ்ரல் அடையாள அட்டை இப்போது இலங்கையில் பாவிக்க முடியாது போய்விட்டது எனது வருத்தமாக, நான் பேசாது இருந்தேன். எனது கடவுச் சீட்டைப் பார்த்து விட்டு அந்தக் குடும்பமும் அவரும் வெளிநாடுதான் என்றுகூறியது எனது காதில் அரைகுறையாக விழுந்து கொண்டு இருந்தது. நான் கண்ணாடிப்பக்கமும் திரும்ப முடியாது எதிர்பக்கமும் திரும்ப முடியாது, முட்கம்பிக்குள் சுற்றிவைக்கப்பட்ட மனிதனாக நேரே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு வராத நித்திரை வந்ததாக கண்மூடி பாசங்கு செய்வதில் காலம் கழிக்கலானேன்.

அம்மா

nortamil.no இல் பிரசுரிக்கப்பட்டது.

அம்மாவிடம் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும்.
அந்த அவா ஒயாத அலையாக மனதின் கரையை நோக்கி ஆர்பரிக்கிறது.


அது என்பிடரி பிடித்து எப்போதும் முன்னே தள்ளிக்கொண்டு இருக்கிறது. நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். நான் அங்கு போனாலும் போகாவிட்டாலும் அம்மாவைப் பொறுத்தவரையில் அது ஒன்றுதான்.போக வேண்டும் என்பது என் அவா மட்டும் அல்ல, அது தர்மீகமும் ஆகும். நான் போகாமல் விடலாம். அதில் என் சுயநலத்தைக் காவாந்து செய்யலாம். அசௌகரியத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். ஏகலைவன் கட்டைவிரலைக் குருதட்சனணயாகக் கொடுக்காமல் விட்டு இருக்கலாம். நானும் அம்மாவிடம் போகாமல் விட்டுவிடலாம். ஏகலைவன் கட்டைவிரலைக் கொடுக்காது விட்டிருந்தால் குருபக்தி தோற்றிருக்கும். நான் அம்மாவிடம் போகாமல் விடமுடியாது. அது என் பிறப்பையே மறுதலிப்பதாகும். அவர்கள் இச்சையில் நான் விளைந்தாலும் அது எனக்கு வழங்கப்பட்ட அரிய பிச்சையாகத்தான் இருக்கிறது. 'நீங்கள் அங்கு போய் என்ன பிரயோசனம்' என்கிறாள் என் மனைவி. நான் போகாமல் இருப்பதாக நினைத்தாலே என் இதயம் குமுறுகிறது. நெஞ்சு நோகிறது. அம்மாவின் பாசம் குழந்தையிடம் மாறுவதில்லை. அவள்தான் உலகம் என்பது எம்நினைவில் அழிந்து போவதில்லை.

அம்மா ஊரில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி போன்ற முத்தேவி கடாச்சத்தோடு அமோகமாய் இருந்தா. நாங்கள் கணக்கு வாத்தியாருக்கு அம்மாவிடம் கற்கும் கணக்கு வித்தையைப் பந்தா பண்ணிக் காட்டிக் கொடுத்தது உண்டு. இப்படியும் செய்ய முடியுமா என்று அவர்கள் வாயைப் பிளந்து வழிவது கண்டு மகிழ்ந்தோம். அம்மா ஒரு மேதை. அத்தனை உலக அறிவு, இலக்கியம், இலக்கணம், கணக்கு, சமுகவிஞ்ஞானம், சோதிடம் எல்லாம் அவவுக்கு அத்துபடியாகும். தேவாரம், திருவாசகம் படிக்கப் படிக்க நான் கேட்டுக் கொண்டு இருந்து இருக்கிறேன். எப்படி அவவால் அவற்றைப் பாடமாக்க முடிந்தது என்கின்ற வியப்பு இன்றும் என்னிடம் அடங்கவில்லை. எனக்கு மாத்திரம் அவற்றில் ஒரு துளிகூட நியாபகம் நிற்பதே இல்லை. என் வாழைத்தண்டு மூளையைக் கண்டு அம்மாவுக்குச் சிலவேளை பொறுமை தொலைந்து போனது உண்டு. எனக்கு எப்போதும் அம்மாவைப் பார்ப்பதில் மலைப்பு ஒய்வதில்லை. அம்மாவால் இவ்வளவு ஞானச் சுடராய் எப்படி இருக்கமுடிகிறது என்கின்ற வியப்பு தொடர்கதையாகவே இருந்தது.


அம்மாவிடம் அறிவு மட்டும் அல்ல பணமும் இருந்தது. வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது அம்மாவின் பகுதிநேரத் தொழிலாகும். ஒன்றறுமே எழுதி வைத்து அம்மா கணக்குப் பார்ப்பதில்லை. எல்லாம் அந்த மூளையில் இருந்து படபடவென வரும். யாரும் அம்மாவிடம் திருப்பிக் கணக்கு கேட்டது கிடையாது. அம்மா சொன்னால் அதில் மாற்றம் இருக்காது. திருப்பிக் கணக்கு கேட்டவர்களை நான் கண்டது
இல்லை. நான் அம்மாவிடம் அதை கற்க நினைத்தேன். எனது மூளை தொடர்ந்தும் அடம் பிடித்தது. எழுதிக்கூட்டினால்கூட நான் மறுமுறை எப்படிச் செய்வது என்பதை மறந்து போய்விடுவேன்.


தோற்றாலும் அம்மா என்னைத் துாரே விலக்கிவிடவில்லை. 'ஐந்துவிரலும் ஒரேமாதிரி இல்லை' எனச் சமாதானம் செய்து கொள்வா.


நோர்வேக்கு வந்த பின்பு பாதுகாப்புக் கருதி அம்மாவையும் அப்பாவையும் நான் இங்கு அழைத்துக் கொண்டேன். அம்மா வந்த புதில் உழைத்ததை எப்படி பெருக்குவது என்பது பற்றி நுட்பமாகச் சொல்லித் தந்தா. எனக்குப் வழமைபோலப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. அம்மா சிரித்தா. 'ஐந்து விரலும் ஒரேமாதிரி இல்லை' என்பது போல அது இருந்ததா அல்லது 'எனக்கு நீயும் வந்த வாய்த்தாயே' என்பது போல இருந்ததா என்று எனக்கு விளங்கவில்லை. எனக்கு விளங்காமல் போவது ஒன்றும் புதுமையும் இல்லை.


அப்பா முதலில் இறந்து போனார். அந்த அதிர்ச்சியில் அம்மா சுருண்டு போய் இருந்தா. கீழே கடைக்கு ஒருநாள் சென்ற அம்மா அதிகநேரம் சென்றும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. நான் தேடிப்போய்க் கூட்டி வந்தேன். அம்மா பழைய அம்மாவாக இல்லாது போனது எனக்குப் புரியத் தொடங்கியது. சாந்தமாக இருந்த அம்மாவுக்கு கோபம் வருகிறது. அது ஆற்றாமையில் வருவது என்பது எனக்குப் புரிந்தது. என்மனைவியால் அம்மாவின் குளறுபடிகளைப் பொறுக்க முடியவில்லை. வயோதிபர் இல்லத்தில் அம்மாவை விட்டாகிற்று. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வருகிறேன். பார்க்காமல் இருக்க என்னால் முடிவதில்லை. அம்மா பழைய அம்மாவாகிவிட வேண்டும் என்கின்ற ஆசை மாறாது நித்தமும் ஆவலோடு அம்மாவை சென்று பார்த்து வருகிறேன். கண்ட கடவுளை எல்லாம் வேண்டி நிற்கிறேன். எந்தக்கடவுளும் கைகொடுப்பதாக எனக்குத் தெரியவில்லை.


இன்றும் போக வேண்டும் என்கின்ற முடிவோடு வெளியே அவசரமாகச் சென்று பேரூந்தில் பாய்ந்து ஏறிக் கொண்டேன். என்னோடு இங்கு அகதிமுகாமில் இருந்து குணன் அந்தப் பேரூந்தில் இருந்தான். அவன் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நான் அருகே சென்று 'தெரியுதா? ' என்றேன். இல்லை என்பதுபோல அவன் வாயைப் பிதுக்கினான். 'நான் பொசைம் முகாமில மூண்டாவது கித்தையில நீங்கள் இருக்கேக்க இருந்தன். என்ர பெயர் தினேஸ். நியாபகம் இருக்கா' 'செரியா நியாபகம் இல்லை' கூறியவன் முகத்தை மறுபக்கம் திருப்பிக்
கொண்டான். நான் பேசாது தெருவைப் பராக்குப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த வயோதிபர் இல்லம் வந்துவிட்டது. குணன் என்னைப் பார்க்க விரும்பாது மறுபக்கம் தலையைத் திருப்பிவண்ணமே இருந்தான். நான் பேரூந்தால் இறங்கினேன்.


அந்த வயோதிபர் இல்லத்தின் உள்ளே செல்ல மனம் படபடவென அடித்துக் கொண்டது. இன்று அம்மா என்ன சொல்லுவா? வழமை போலத்தானா? கடவுளே அம்மா ஏதாவது வித்தியாசமாகச் சொல்ல வேண்டும். நான் கடவுளை மனதிற்குள் மன்றாடியபடி உள்ளே சென்றேன். அம்மா இருக்கும் பகுதியில் வேலை செய்யும் தாதிமார் என்னைக் கண்டு வணக்கம் சொல்லிக் கொண்டு போனார்கள். நானும் வணக்கம் சொல்லிக் கொண்டு போனேன். அவர்களைத் தொடர்ந்து பார்த்துப் பார்த்து நல்ல பழக்கமாகிப் போய்விட்டது. எனக்கு ஒருமுறை ஒருவரைப்பார்த்தால் நல்ல நியாபகம் இருக்கும். நான் அடிக்கடி அம்மாவை வந்து பார்த்துச் செல்வது அந்தத் தாதியருக்கு என்மீது ஒருவகை மதிப்பை உண்டு பண்ணி இருக்கிறது. யாருமே வராது அனாதையாக கிடக்கும் சில நோர்வேஜீரோடு ஒப்பிடும்போது எனது பங்களிப்பு அவர்களை மெச்ச வைத்து இருக்க வேண்டும்.


நான் பரபரப்பாகச் சென்று அம்மா முன்பு நின்றேன். அம்மாவில் எந்த பரபரப்போ மற்றமோ இல்லை. நான் அம்மாவின் கையை எனது கையால் பிடித்துக் கொண்டு 'அம்மா என்றேன்'. அம்மா வெடுக்கென எனது கையைத் தட்டிவிட்டா. 'நீயாரு? எனக்குக் கலியானமே ஆகேல்ல என்னை அம்மா எண்டுறா... துாரப் போ' என்றா.

3 டிசம்பர், 2011

இரதியக்கா

nortamil.no இல் பிரசுரிக்கப்பட்டது.
-------------------------------------
சந்திரனைப் போன்ற இரதியக்காவின் வட்டமுகம் அடிக்கடி சூரியனைப் போலச் சிவந்து போவது உண்டு. பெண்விடுதலை பற்றி இரதியக்கா கதைக்கத் தொடங்கினால் சூரியனைத் தலைக்கு மேல் வைத்ததாகக் கோபம் அவவிடம் இருந்து பீறிட்டுப் பாயும். அவவின் கோபாக்கினி தாங்கதா பல ஆண் சூரியர்கள் முகத்தைச் சந்திர கிரகணமாக்கிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியே நழுவிவிடுவார்கள். அப்படி ஆண்கள் வெளியே செல்வது ரதியாக்காவுக்குப் போரில் புறமுதுகிட்டு ஓடும் படையைத் துரத்திய குசியை ஏற்றும். ஆண்கள் இல்லாத அரங்கத்தில் ஓங்காரமாய், ஓங்கியறைந்து தனது கருத்தை இரதியக்கா சொல்லுவா. இரதியக்கா சொல்லும் கருத்தைக் கேட்க ஒருகூட்டம் பெண்கள் வருவார்கள். அவர்கள் இரதியாக்காவின் தேவவாக்கிற்கு ஆமாம் போட்டு ஆமோதிப்பார்கள்.

இரதியக்கா பச்சைச் சந்தனமாக மினுங்கும் தங்க நிறம். தன்னை அழகு படுத்துவதில் பிரம்மலோகத்து இரதிக்குத் தங்கை என்பது அவவின் நினைப்பு. நாற்பது வயதை எட்டிவிட்டாலும் பதினெட்டு வயது என்கின்ற பௌவுசு குறையாத நடப்பு. இரதியக்காவிடம் யாரும் வயதைக் கேட்பதில்லை. வாயைக் கொடுத்து எதையும் புண்படுத்திக் கொள்ள எவரும் விரும்புவதில்லை. இரதியக்கா நடந்து போனால் பின்னழகு தேரழகாகத்தான் ஜெலிக்கும் அல்ல நெளிக்கும். அதைப் பார்த்து விசிலடிக்க பலருக்கும் விருப்பம். துணிவு யாருக்கும் கிடையாது என்பது ஒஸ்லோவின் யாதார்த்தம். அடிக்க வேண்டும் என்கின்ற ஆசை எழுந்தாலும் கமுக்கமாக மடக்கி வைத்துக் கொள்வது சர்வ நிட்சயம். கரைச்சலைக் காதலிக்க யாருக்குத்தான் விருப்பம்?. அவமானப்படுவதில் யார்தான் குசிகாண முடியும்?.

இரதியக்காவைப் பொறுத்தவரை ஆண்கள் மிருகங்கள். பெண்களை காமத்திற்காக மட்டும் வேட்டையாடும் மிருகங்கள். இச்சை தீர்த்துச், சந்ததி பெருக்கும் இயந்திரங்கள். அந்த இயந்திரங்களின் பசிக்காக நித்தமும் கயங்கும் மாதர்கள். கயங்கிய பின்னும் அடிமையாகக் காலம் கழிக்கும் தியாக தீபங்கள். அந்த அபலைகளின் விடுதலைக்காகக் கொடிய மிருகங்களை எதிர்த்துப் போராடும் வீராங்கணை தான் என்பது அவவின் நினைப்பு.

காமத்தைப் பெண்களும் பங்கு போடுகிறார்கள் அல்லவா? காதல் என்கின்ற உணர்ச்சி போர்த்தி, ஊடல் என்கின்ற கொக்கி போட்டுக், கலவி என்கின்ற கழிப்பில் திளைத்து. பங்குதானே? இரண்டு கைகள் தட்டாதபோது ஒலி எங்கே பிரசவிக்க முடியும்? இரவில் பெண்கள் எல்லாம் கற்பழிக்கப்பட்டால் பகலில் உலகவாழ்கை எப்படி இருக்கும்? பெண்விடுதலைக்கு எதிராய் இருப்பதே பெண்கள் அல்லவா? ஆண்களை ஆளுவதும் பெண்கள்... பெண்களை அடிமையாக்குவதும் பெண்கள். இப்படி யெல்லாம் யாராவது மடத்தனமாய் கதைத்துவிட்டால், கழுத்திற்கு மேல் தொங்கும் சூரியனை் வெடித்துச் சிதறுவதை யாரும் தடுக்க முடியாது. இரதியக்காவைத் தெரிந்தவர்கள் யாரும் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வதில்லை. வீட்டில் குடுமி பிடிப்பவர்கள்கூட இரதியக்காவைக் கண்டால் கூஜா துாக்கத் தயாராகி விடுவார்கள்.

ஒருபகுதி ஆண்கள் பெண்களைப் போகப் பொருளாக வேட்டையாடுவது உலக நிதர்சனமே. காமத்திலும், மோகத்திலும் மனநோய்பட்ட ஆண்கள் உண்டு. பெண் என்பவள் ஆளப்பட வேண்டியவளே என்கின்ற எண்ணம் கொண்ட கற்கால ஆண்களும் எம்மிடத்தில் உண்டு. சீர்தனம் வேண்டுவது வெளிநாட்டில் வாழும் தமிழருக்குகூடப் பெருமை தரும் சிறுமை என்பதும் உண்டு. வாங்கப்படுகிறோம், விற்கப்படுகிறோம் என்பது எங்கள் கலாச்சாரத்தில் பேரம் என்று பெருமை பேசப்படுகிறது. ஒருபானை சோற்றிற்கு ஒருசோறு பதம் என்பது மனித மனத்திற்கு ஒத்துப் போகாது. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன் என்பது உலகம் உருளுவதைப் போல மாறாத உண்மை. யாரும் இரதியக்காவிற்கு முன்பு ஆண்களிலும் நல்லவர்கள் உண்டென்று நியாயம் கதைத்தால்...? வேண்டாம். யாரும் கதைக்க வருவதில்லை.

தமிழ்ச்சங்கக் கூட்டத்திற்குச் சிவராமன் வந்து இருந்தார். அவர் இப்பொழுதுதான் வடநோர்வேயின் குளிரில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காய் ஓஸ்லோவிற்கு மாறியிருக்கிறார். ஒஸ்லோவில் இருப்பவர்கள் இந்தக் குளிரை விட்டு இங்லாந்திற்கு அல்லது ஸ்பானியாவுக்குப் பாயவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சிவராமன் தனக்கு அருகில் இருந்தவரோடு இலக்கியம் பற்றிக் கதைத்தார். 'இலக்கியம் என்பது அனைத்து மக்களாலும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது அவருடைய வாதமாகிற்று. 'வித்துவத்தைக் காட்டுவதற்காய் வரையப்படுபவை வேண்டும் என்றால் விமர்சைப் படுத்தப்படலாம், என்றாலும் அது மக்களிடம் சென்றடையாத, விரையமான படைப்பே! ' என்று அவர் வாதிட்டார். 'படைப்பின் தரம் அழியா முத்திரை. அதில் பழுதுபடவும் விடலாகாது' என்றார். அவர் அப்படிச் சுவரசியமாகக் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுதுதான் அவரை மேலும் கீழுமாக அளவெடுத்த வண்ணம் இரதியக்கா அவர் அருகே வந்து அமர்ந்தா.

சிவராமனைச் சுற்றித் திடீரெனச் சுனாமியாக வந்து இறங்கிய அமைதி. ரதியாக்கா சிவராமைப் பார்த்துச் சிரித்தா. சிவராமனும் தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடல் எடுத்து... என்கின்ற கண்ணதாசனின் வசன நினைவுகளோடு சிரித்தார்... நெளிந்தார். யார் என்று சிந்தியாது இலக்கியத்தில் பெண்கள் பற்றிய விவாதத்தில் இறங்கினார்.

சிறிது நேரம் விவாதம் நடந்தது. பலர் மௌனத்திடம் மண்டியிட்டனர். இரதியக்கா தனது கட்டுப்பாட்டை இளந்து இருந்தா. சிவராமன் நியாயம் என்று தனக்குப் பட்டதைக் கணிரென்று உரைத்தார். சூரியனுக்கு உள்ளே என்ன நடக்கிறது? எதனால் அவன் கொதிக்கிறான்? அணுக்களின் சேர்க்கையில் உருவாகும் அபரிமிதமான சக்தியில் அவன் கொதிப்பது உண்மையானால், பெண்களின் உரிமைக்குப் போராடும் உத்தமி என்கின்ற நினைவின் சேற்கையில் உருவாகும் தீமூழும் கோபத்தில்... தாக்கத்திற்கு எப்பொழுதும் மறுதாக்கம் உண்டு என்கின்ற விதி உண்மையானால், ஆண் என்னும் பேயின் நியாயத்திற்கு ஏதிராக இரதியக்காவின் அமைதி என்னவாகும் என்று எல்லோரும் திகைத்த பொழுது, கோபத்தில் பொங்கியெழுந்த இரதியக்கா, சிவராமனைப் பார்த்து 'வேசைமகனே' என்றா.

திரிபு முன்னுரை

கவிதை முன்னுரை

எங்கே முன்னுரை