31 மார்ச், 2010

நாங்கள்

மெல்லத் தூவும் வெண் மலர்கள்
மேனி கூசும் ஊசிக் குளிர்
நித்தம் நினைவிலெழும் அந்த நாட்கள்
திசை மாறிவந்த ஒட்டகங்களாய்
வடலிகளைத் தேடும் குருடர்கள்...

பொய்

பொய் திரும்பத் திரும்ப
சொல்லப்படுவதாலல்
உண்மையாகி விடும் என
எண்ணுபவர்கள்
அதைக் கடைசிவரையும்
திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டே
இருப்பார்கள்.
கரியைச் சுட்டால்
தங்கமாகிவிடும் என்கின்ற
சூனிய அறிவோடு.

அந்திமம்

தொப்பிள் கொடிகள்
அறுந்தபோது துளிர்த்த
அந்தக்கனவுகள்
இன்று கருகிப் போன
வடுக்களாக துறுத்தும்
வேதனை...

தவண்ட குழந்தைகளுடன்
வளர்ந்த ஆசைகள்
தடம்மாறிய வாழ்வில்
என்றோ எங்கோ
தவறிப் போய்விட்ட
பரிதவிப்பு...

ஊட்டிய போதெல்லாம்
அந்திமகாலத்தில்
அரவணைப்பார்கள்
என்கின்ற நம்பிக்கையில்
குதுகலித்தவளின் கனவில்
சற்பங்கள் குடிவந்த
அவதி...

ஓடிவிளையாடி போது
துசுபட்டதிற்காய்
துடித்தவளை
இன்று தூசுகள்கூட
மதிப்பதில்லை அது
அங்குமிங்கும் அதிகாரத்தோடு
அவள்மீது சவாரிசெய்யும்...

கிழக்கில் உதிக்கின்ற
சூரியனுக்கும் பரிகாசம்
வெழுக்கும் முதுமையுடன்
பிறக்கும் குழந்தைகளே
உங்கள் கால்களும்
விரைவில் தள்ளாடும்
என்பதாக...

கூனிவிட்ட உடலும்
குறைந்துவிட்ட பார்வையும்
தளர்ந்து விட்டநடையும்
பார்த்து
கிழங்கள் என்பதாய்ச்
காலம் சிரித்தாலும்
விறைத்த அவள்நம்பிக்கை
நெடுந்தூரம் நோக்கும் அவளின்
கூசுகின்ற விழிகள்
இன்னும் நம்பிக்கையோடு நோக்க...

ஏக்கத்தின் காத்திருப்பு
எப்போது முடியும்
என்னும்
ஏக்கத்தோடு
காத்திருக்கும்
காலம்...

மனிதன்

மனிதன் ஒருமிருகம்
அந்த மிருகத்தில்
ஆயிரம் சுயநலம்
ஆதனால் பிறப்பது
ஆபத்தான குரூரம்
அதுவே அவனின்
மறுபக்கம்.

இன்னும் கூக்குரல்...

பந்தையக் குதிரையில் பணம் கட்டடிய
வெளிநாட்டுத் தமிழர்கள்...

தோற்றுப் போன குதிரைகளை
சபிக்க முடியாதவர்களாய்

நேற்றைய கனவில்
என்றும் மிதக்கும்
யாதர்த்த விரோதிகளாக

என்றும் பறிக்கும்
அண்டங்காக்காய்களின்
பிடுங்கல் தொடர

எந்த இலக்குமில்லாது
இன்னும் கூக்குரல்....

தைப்பொங்கல்

துருவத்துப் பொங்கல்

வெப்பத்தைக் குளிருறிஞ்ச
வெளிச்சத்தை மாத்திரமே
கள்ளன் பெண்டாட்டிபோலத்தரும்
துருவத்துச் சூரியன்.

முற்றத்தில் வெள்ளிநட்சத்திரமான
பனித்துளிகள் மினுங்க
மண்ணடுப்புகளும் சுள்ளிவிறகுகளும்
அந்தக்கால நினைவுகளிலுறங்கும்

புதுபானைகளும் சட்டிகளும்
பழைய கதைகளாக...
வரையாத கோலத்தில்
மெழுகாத பளிங்கடுப்பில்
புதிதாக ஏறும் பழைய
உலோகப் பானைகள்...

தலைப்பாகை சாய்ந்துவிட்டல்
பளிங்கடுப்பிற்கு களங்கமென
பாதியிலே அரிசியிட்டு
பதற்றத்திலே புக்கையாக்கி

தாமரைப்பூ மாமிக்கு
தாராளமாய் படைத்துவிட்டு
நாங்கள் உண்டுமகிழும்
நல்ல தைப்பொங்கல்

28 மார்ச், 2010

கடவுள்

கடவுள் எனபவர் என்
கனவில் வந்தார்.

என்னை நம்புகிறாயா
என்றொரு
கேள்வி கேட்டார்.

இல்லையே இறைவா
எதற்காக உன்னை நான்
நம்பவேண்டும் என்றேன்.

நான் கடவுள் என்றார்.

நீ கனவில் மட்டும்
வருபவர்தானே என்றேன்.

நிஜத்தில் நான்
வரமுடியாது என்றார்.

ஏன் என்றேன்.

மெளனமாய் இருந்தவர்
மனிதரைப் பற்றிய
உன் எண்ணம் என்ன என்றார்.

மனச்சாட்சியற்றவர்கள்
உன்னை மனமுருக வேண்டுவதாய்
நித்தமும் நடிப்பவர்கள் என்றேன்.

மனிதனான உனக்கே
புரிந்தபோது நான்
என்ன செய்வது என்றார்.

நீ இறைவன்.
துணிலும் இருப்பாய்
துரும்பிலும் இருப்பாய் என்றேன்.

சுத்தமாய் இருந்தால்
மட்டும் நான் அங்கு இருப்பேன்.
மனிதார்களில் நான்
எப்படி இருப்பேன் என்றார்.

எல்லாம் அறிந்த உன்னால்
ஏன் இருக்கமுடியாது
அவர்கள் உள்ளத்தில் என்றேன்.

மூடனே அவர்கள்
அசுத்தப்பட்டவர்கள்.
கரங்களிலே சிசுக்களின்
குருதி படிந்தவர்கள் என்றார்.

முற்றும் அறிந்த இறைவா
நீ மூடனா என்ன என்றேன்.

ஏன் அப்படிக் பேசுகிறாய் என்றார்.

ஒரு நாஸ்தீகனிடம் வந்து
ஆஸ்தீகம் பேசுகிறீரே என்றேன்.

நான் நாஸ்தீகனிடம் வரவில்லை
மனச்சாட்சி உள்ள
மனிதனைத் தேடினேன்.
மானிடா உன்னைக்
கண்டுகொண்டேன் என்றார்.

உன் படிகளிலும் பாதங்களிலும்
இருப்பவர்கள் என்றேன்.

உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசுகிறார்கள்
மனிதா என்றார்.

உன்னடி வந்த எம்முறவுகள்
எங்கே என்றேன்.

ஒருபகுதி சுவர்க்கத்திற்கு
மறுபகுதி நரகத்திற்கு என்றார்.

அயல்நாட்டில் வாழும் எம்முறவுகள்
வந்தால் என்ன செய்வாய்
என்றேன்.

தெரிந்து கொண்டே
கேட்காதே மனிதா என்றார்.

நான் உன்னுலகிற்கு வந்தால்
எனக்கு நரகமா தருவாய் என்றேன்.

இல்லை சுவர்க்கம் என்றார்.

என்ன நாஸ்தீகனுக்கு
சுவர்க்கமா என்றேன்.

நான் தண்டனைகளை
நம்பிக்கை பார்த்து கொடுப்பதில்லை.
அவரவர் செய்த வினைகளைப்
பார்த்துக் கொடுப்பவன் என்றார்.

மனச்சாட்சி அற்ற
மனிதர்களைவிட
நாஸ்தீகம் பேசும் நீ
மேலானவன் என்றார்.

மனிதனே தன்னைக் கடவுள்
என்கிறானே
நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் என்றேன்.

நீ கடவுள் இல்லை என
மறுப்பது என்னைப் பார்க்க
முடியவில்லை என்பதால்.
அவன் தானே கடவுள் என்பது
என்னையே ஏமாற்றவது என்றார்.

உன்னை மன்னிக்கலாம்
ஆனால் அவர்கள்...
வரட்டும் என் இராட்சியத்திற்கு
இறைவனே கறுவிக் கொண்டார்.

அரசியல்வாதிகள்

நிமிர்ந்து நிற்கும் கற்பகதருவே
நீயெமக்கு ஒரு சாட்சி
மகிழ்ந்து வாழ்ந்த எம்மினம்
மலடாய்ப் போனது பார்த்திரோ?

செளித்து நிற்கும் ஆலே
செவிடாய்ப் பாவனை செய்யாதே
விழுதாய் பரவிய உன்கையை
வெட்டி எடுத்தவர் யாரன்றோ?

அழிந்து போன குடில்களே
யாரை நோவோம் முடிவிலே
கடந்து போன காலத்தை
கண்ணீர் கொண்டு அழிப்போமா?

வீரம் பேசி நடித்தார்கள்
வென்று தருவதாய்த் துடித்தார்கள்
சோரம் போன எம்மினத்தில்
சுகத்தை மட்டும் சுகித்தாரோ?

நெற்றிக் கண்ணிருந்தால் திறக்கட்டும்
அவரெம்நெஞ்சை வெண்டுமென்றால் அறுக்கட்டும்
கொஞ்சிப் போகும் அணிலினமே
கூறிச்செல்லும் அவர் துரோகத்தை?

பேசித் தீர்க்கும் பிரச்சனையை
பிணக் குவியல் ஆக்கினரே
ஆபிரிக்காவின் ஒரு மண்டேலா
ஆகுவாரா இவர் எல்லாம்?

கல்வி

மண்போட்டு விரலெரிய
அனா எழுதியபோது
எனது குஞ்சுப் பருவம்
சுருங்கிப் போனது

பிரம்புகள் கொண்ட
பிரமாக்களைக் கண்டபோது
கொஞ்சமிருந்த நம்பிக்கைகளும்
சூறையாடப் படலாயிற்று

அடியாத மாடு
படியாது என்பதில்
பள்ளி ஆசைகள்
தொலைந்து போயிற்று

மிஞ்சியிருந்த மூர்க்கம்
எல்லாம் வன்முறையிடம்
வசப்படலாயிற்று

கல்லுரிவிட்டு வெளியேறும்
போது நான் கவிதை பாடவில்லை
கத்திபற்றி ஆழமாகச்
சிந்திக்கிறேன்...

மனச்சாட்சி

மனிதனில் கடவுள் காணும்
மடமை கொண்ட மானிடா
கடவுளே மனிதனின் ஒரு
கைங்கரியம் இங்கு தானேடா

மந்திரங்களும் தந்திரங்களும் உன்னைமயக்கும்
மயக்கத்தில் உன்சித்தம் தனைப்பறிக்கும்
மதியின் கண்கட்டி அதுவுன்
வாழ்நாளை நித்தமும் குடிக்குமடா

சாமிகளான ஆசாமிகளை நம்பி
சீதைகளும் நவீன திரெளபதியாகிறாரடா
வித்தையில்கொட்டும் வெள்ளி நாணயத்தில்
வெறிகொண்டலையும் காவி உடையாரடா

மனங்களை விற்றவர்கள் எங்கு
காவியுடையில் இருந்தால் என்னடா
கடவுளாக வந்தால் என்னடா
வரங்களாக வக்கிரங்களையே தருவாரடா

உனக்கும் எனக்கும் அவர்க்கும்
உண்மையான கடவுள் யாராடா
உன்னிடமும் என்னிடமும் அவரிடமும்
உள்ள மனச்சாட்சி தானடா

நீதி அநீதி என்பது ...

நீதி அநீதி என்பது
உனக்கும் எனக்குமான
வித்தியாசமா முகவரிகள்

மனிதம் மரிப்பது உனக்கு
நீதியாய் இருந்தால்
அநீதி என்று சொல்வதில்
நான் அடங்கப்போவதில்லை

அரசியலுக்காய் நான்
கவிதை எழுதவில்லை
கவிதை எழுதுவதற்காய்
நான் அரசியல் பேசவில்லை

ஒற்றைக் கண்ணால்
பார்த்துக் கொண்டு
நியாயம் பேசமுடியாது

மரிப்பவன் யாராய்
இருந்தாலும்
மரணம் கொடுப்பதற்கு
நீ யார்?

முதலில் மனிதராக
நாங்கள் இருக்க வேண்டும்
பின்பு தமிழராக
இருப்பது பற்றி சிந்திக்கலாம்

புரிகிறதா அல்லது
கோபம் வருகிறதா
மனிதராவோமா அல்லது
மிருகமாவேமா?

அவள்

அவளொரு தாரகை
அழகிய காரிகை
மருவியே வந்தவள்
மர்மங்கள் காட்டினாள்

நூலான இடை
வேலான விழி
தாளாத பார்வை
சளைக்காத நளினம்

மென்பட்டு நீக்கினாள்
மெய்யழகு காட்டினாள்
மூவழகும் கண்டு
மோகத்தில் மெளனித்தேன்

இலக்கணம் இடையா
இலக்கியம் விழியா
முத்தமிழ் உடலா
மொத்தமே தமிழா

அத்தனை அழகு
அவளின் அசைவில்
தித்திக்கும் கவிதையாய்
துள்ளும் நடையழகு

சொற்களின் கோர்வையில்
சொற்கங்கள் காட்டினாள்
பாண்டியர் சபையாள்
பழமைமொழி யாவாளாள்

கனவு கண்டேன்

வெள்ளைக் காகம்
பறக்கக் கண்டேன்
வெண்பனி கொட்டும்
ஈழம் கண்டேன்

தண்ணொளி வீசும்
சூரியன் கண்டேன்
தணலாய்க் கொதிக்கும்
சந்திரன் கண்டேன்

அல்லி மலரப்
பகலில் கண்டேன்
ஆதவ கிரகணம்
இரவில் கண்டேன்

நாகம் ஒன்றின்
நட்பைக் கண்டேன்
நல்ல பசுவின்
வெறியைக் கண்டேன்

புல்லுத் தின்னும்
புலியைக் கண்டேன்
புலால் உண்ணும்
இடபம் கண்டேன்

இராமனும் சீதையும்
விலகக் கண்டேன்
இராவணனைத் தேடியவள்
போகக் கண்டேன்

நிகழ முடியாதவை
நிரையாகக் கண்டேன்
நிகழ்ந்தவை யெல்லாம்
கனவாகக் கண்டேன்

செந்தமிழ் கன்னியே

செந்தமிழ் கன்னியே
சிந்தையில் நிறைந்தவளே
உன்னழகு என்னையே
கொல்லுமது நித்தமே

இலக்கணம் முன்னழகா
இலக்கியம் பின்னழகா
இயலென்ன இடையழகா
இசையென்ன சொல்லழகா

நாடகம் நடையழகா
நாம்போற்றும் வடிவழகா
தேமதுரத் தமிழழகே
திசையெங்கும் நீயழகே

வான்போற்றும் மன்னரெல்லாம்
வணங்கிட்ட உன்னழகு
வாழ்ந்தவிதம் என்னதன்றோ
வாழும்விதம் ஏதன்றோ

வாய்வீரம் பேசியே
வீழ்ந்ததடி எம்மினம்
வாழ்வதாக நினைத்துன்தன்
வைத்திருப்பும் இல்லாதாகுமோ?

இயற்கை கற்றுத்தந்த

ஆற்று வெள்ளம்
ஆவேசம் கொள்ளும் போது
வீரம் பேசி அழிவதில்லை
நாணற் புற்கள்

காற்று அது வேகம்
கொண்டால்
காற்றின் பக்கம் சாய்வது
விவேகமு தவிர வெக்கேடல்ல

நேசத்திற்காய் நெஞ்சத்தை
கொடுபது மகிழ்வு
ஆசைக்காக அறிவைக்
கெடுப்பது அவமானம்

இயற்கை கற்றுத்தந்த
பாடத்தை இன்னும்
மறுக்கும் மனிதன்
விட்டில் பச்சிகளாய்
மரணிக்கும் அவலம்

கட்டுப்பணம்

மில்லியன்களைக் கொடுத்து
மாளிகையான வீடுவேண்டிய போது
வாழ்வின் இன்பமா நேரங்களை
வழித்தெடுத்து கடன் கொடுப்பது
புரியவில்லை

காலை எழுந்தவுடன்
நினைவில் வரும் வேலை
இரவு தூங்கும்போதும்
நினைவைவிட்டு அகல மறுத்து
கனவுகளாக விரிய
அவஸ்தை உடன்
நடுவிரவில் விழித்ததிருந்து
வீங்கிப் போன கண்கள்

இருந்து உண்பதற்கு
நேரமின்றி வழியில் வேண்டி
நடையில் கடிக்கும்
அவசரம்

பிள்ளைகள் விழித்திருக்க
கண்டு சிலமாதங்களாக
சொற்பனத்தில் வரும்
அப்பாவான உணர்வு
மனதை அழுத்தம் தர
பதிவுசெய்யப்பட்டு காட்சிகளில்
நவீன நிலவைக்காட்டும்
புதிய அம்மாக்கள்

வாழ்க்கை என்பதை
நித்தம் தொலைத்துக் கொண்டு
வாழ்வைத் தேடுவதாக
மண்குதிரையில் சவாரி செய்யும்
நடப்பது புரியாத
நடைப்பிணங்களாக

இன்றைய கனவுலகில்
எதுவும் இன்றி
சஞ்சாரிப்பவர்களை
நாளைய தனிமை
வரவேற்க காத்திருக்கும்

மாற்றம்

இன்றைய சக்கரவர்த்திகள்
நாளைய கைதிகள்
இன்றைய கைதிகள்
நாளைய சக்கரவத்திகள்

இன்றைய செல்வந்தன்
நாளைய ஏழை
இன்றைய ஏழை
நாளைய செல்வந்தன்

இன்றைய முதலாளி
நாளைய கூலிக்காறன்
இன்றைய கூலிக்காறன்
நாளைய முதலாளி

இன்றைய பலசாலி
நாளைய கோளை
இன்றைய கோளை
நாளைய பலசாலி

இன்றைய வன்முறையாளன்
நாளைய அகிம்சாவாதி
இன்றைய அகிம்சாவாதி
நாளைய வன்முறையாளன்

இன்றைய புயல்
நாளைய தென்றல்
இன்றைய தென்றல்
நாளைய புயல்

இன்றைய வெண்முகில்
நாளைய கருமுகில்
இன்றைய கருமுகில்
நாளைய வெண்முகில்

இன்றைய பதுமை
நாளைய பிடாரி
இன்றைய பிடாரி
நாளைய பதுமை

என்றும் மாறும்
இந்த உலகில்
எத்தனை மமதை
ஏன்னிந்தச் சிறுமை?

மனிதமிருகம்

மிருகமான மனது
அதை மறைக்க
மனிதன் என்னும் போர்வை
மிருகத்தோடு வாழும்
மனிதனா
மனிதனோடு வாழும்
மிருகமா
என்றும் ஓயாத
ஒரு கேள்வி
என்னை நித்தம்
உதைத்து தள்ளும்

நித்தம் கலைக்கும்
மிருகம்
செத்துப் பிழைக்கும்
மனிதம்
மிருகங்கள் வெல்லும்
மனிதம் தின்று
அது நன்றாய்
கொழுக்கும்
மனிதங்கள் மாளும்
பிண்டங்கள் போனபின்
எலும்புகளாய் அது
நிறைந்து கிடக்கும்

என்றாலும் மனிதம்
நின்றேதான் போராடும்
அது வென்றாலே
வாழும்
மிருகத்தில் மனிதம்.
அன்றேல்
மதம் கொண்டாடும்
மிருகம் மனிதவேட்டையில்
வேகம் காட்டும்.

மனிதன் என்கின்ற
மிருகம்
மிருகமாகவே வாழ
மனிதம் மரிப்பது
தொடர்கதையாகும்.

மிருகமான மனிதன்
இயற்கைக்கே சவாலாக
கூர்ப்பிற்கு புது
இலக்கணமாக
இரண்டுகாலில் எங்கும்
சவாரி செய்ய

மிருகம் கொன்று
மனிதம் வெல்ல
மனித மிருகம்
புதிய டார்வினை
கலங்களின்
எல்லைக்கோடுகள்
தாண்டி
இனியாவது
தேடுமா?

சுடலைக்குருவியை

பரந்த வயல்களில்
விளைந்த நெல்லின்
வாசம் நாசியில் ஏறும்
அந்தச்சுகம்
நிரந்தரமாக தவறிப்போனது
எங்கள் ஏக்கங்களில் ஒன்றாக...

வம்பளந்த தேர்முட்டிகள்
மனித இனமே வற்றிவிட்டதாய்
கண்ணீர் வடித்து வரவுக்காய்
காத்திருக்க...

பனையும் தென்னையும்
பதநீரெடுத்து சுவைக்க ஆளில்லாமல்
மடியின் வலியில்
துடிதுடித்து துக்கம் கொண்டாட...

தும்பிகளும் இளம்தென்றலும்
அந்தி மலரின் அற்புதவாசனையும்
பசும்புற்றறையான கோவில்வீதிகளில்
பதிந்த கால்களும்
இனிப் பழங்கதைகளாக...

எங்கோ கேட்கும்
சுடலைக்குருவியை
இனி எப்போதுமே
கேட்கமுடியாது போக
இயந்திர ஓலிகளே
எம்மைக் கட்டுப்படுத்த...

அந்தியில் சூரியனும்
அவன் பொன் தகடான கோலமும்
உங்களைப் பிரிந்து
அழியில் மூழ்கேன் என அவன்
அடம்பிடித்த காட்சியும்
என்றும் மனதில்
நிரந்தரமாய்
இடம்பிடிக்க...

ஆற்றில் தொலைத்துவிட்ட
சுந்தரருக்கு குளத்தில்
கிடைத்தது
எங்களுக்கு கிடைக்கவில்லையே
என்கின்ற எக்கத்தில்...

நாட்களுடன் சண்டையிட்டு
கனவுகளை அடைகாத்துக் கொள்ள
பகலிலே கண்மூடி
நித்திரைக்குத் தவமிருக்கும்
நாங்கள்.

ரோஜாவிடம் ஒரு கேள்வி?

ரோஜாவிடம் ஒரு கேள்வி?

ரோஜாக்களாக மலர்ந்துவிட்டு
வண்டுக்காக தவமிருக்கும்
அவமானத்தில்
கூனிக்குறுகிப்போன
மலர்களே...

வண்டுகள் தங்களையே
விற்று தங்கம் சேர்ப்பது
கண்டபின்னும் உங்களுக்கு
ஏன் இந்தச் சோகம்?

மானம் போகுதே எனத்
துடிக்கும் ரோஜாவே...
அடிமை வண்டுடன் ஆன
உறவில் அவமானமில்லையா?

நாடுவிட்டு நாடு சென்றபின்பும்
நகைகேட்டு அலையும்
வண்டை எண்ணி
வாடும் ரோஜாக்களே
உங்கள் வாட்டத்தில்
நிஜாயம் உண்டோ?

மானம் கெட்ட அவர்களுக்காய்
நீயேன் வேளை கெட்டுக்
காத்திருக்கிறாய்?

பண்டமாற்று செய்ய
நினைப்பவரிடம்
உன் உணர்வையும்
மென்மையையும்
எதற்காக அடகுவைக்கிறாய்?

உன்னிடமே கூலிவேண்டி
உன்விளைச்சலையே
சொந்தம் கொண்டாடும்
சுயநல வண்டுகளிடம்
உனக்கேன் இன்னும்
இந்த ஊடல்?

தேடலற்று ஊடலையே
நாடும் வண்டை விட
புயலை நாடிப் போ ரோஜாவே
உன் வாசமாவது
இழுத்துச் செல்லப்படலாம்.