23 மே, 2010

அசுரப் போராட்டம்

ஆயிரம் மெழுகுவர்த்திகள்
மெளனமாகக் கரைந்தன
ஆயிரமாயிரம் உயிர்களைப்
பாசிசம் குடித்தது

ஒரு அசுரனைக்கண்டு
நாம் தெய்வத்திடம் ஓடாது
மறு அரசனை அழைத்துவந்து
மரணம் படைத்தோம்

சிறு தெய்வங்களை
அசுரன் கொன்றபோது
நாம் சிலாகித்து நின்றோம்

எதிர்த்தவரை
சுடலைச் சாம்பலில்
புரளுபவனின் சுற்றத்தார்
பித்தர்கள் என்றோம்

சுற்றம் விட்டு
நவீன சுடலை நோக்கி
ஓடுங்கள் எனக்
கட்டளை இட்டோம்

மிஞ்சியவரை எரித்து
சாம்பலாக்கி வந்து
புரளுங்கள் என்றோம்

எங்கள் கண்கள்
நியாய அநியாயத்தை
புறம்தள்ளி இலட்சியத்தை
மட்டுமே பார்த்ததென்றோம்

மண்ணை மீட்கப்
பதறிய நாங்கள்
மனங்களை மாத்திரம்
தொலைத்து வந்தோம்

அசுரனிடம் நியாயம்
கேட்டவரை எண்ணி
கடவுளும் நிரந்தரமாக
கண்மூடி இருந்தார்

பணத்திற்காக கோசம்
போட்டவர்களை இனத்திற்கான
தேச பிதாக்களாக
உருவகித்தோம்

பேசிய குரல்வளைகளை
அறுத்து எறிந்தோம்
மாற்றுக் கருத்தை
துரோகிகளாக்கி னோம்

பேசியது துரோகம்
இல்லை பேச்சை
நிறுத்தி வைத்தது
துரோகம் என்பது
புரியாது இருந்தோம்

மனிதர்களை ஓமகுண்டத்தில்
தள்ளிய அசுரர்களின் போராட்டம்
முடிந்தபோது கோவணமும்
இல்லாத எம்மினத்தின்
கண்ணீரில் வியாபாரம்
நடத்தும் நாடுகடந்த
தமிழர்கள் ஆகினோம்

நீங்கள் கண்ணீர்விடுவதாக
வியாபாரம் செய்கிறீர்கள்
எங்கள் கண்களில்
எப்போதும் இரத்தம்தான்
வருகிறது.

ஆயுதப் பேச்சால்...

மெளனித்த மனிதர்கள்
தொலைந்துபோன நீதிகள்
மறுக்கப்பட்ட உரிமைகள்
கொடுக்கப்பட்ட தண்டனைகள்

உலாவிவந்த நம்பிக்கைகள்
எகிறிவிழுந்த அதிகாரங்கள்
நெரிக்கப்பட்ட குரல்வளைகள்
உறைந்துபோன இரத்தங்கள்

அகழ்ந்தெடுத்த உரிமைகள்
மீட்டெடுத்த மண்
ஒளிந்துபோன வேறுபாடுகள்
நிமிர்த்திக்கொண்ட வீரம்

அது மெளனித்தபோது
ஊமைகளாய் உலாவிவந்த
நானும்நீயும் இரகசியம்பேசும்
உரிமையாவது கிடைத்தது

அந்த உரிமையில்
வந்த நம்பிக்கையில்
மாண்ட மனிதருக்காய்
மெளனிக்கிறேன் என்றும்...

15 மே, 2010

நான்...

மனிதம் தொலைத்த நான்
மறுகருத்தே அற்ற நான்
புனிதம் தொலைத்த நான்
பிறதேசம் சென்ற நான்

கொலையில் மகிழ்ந்த நான்
இதயம் இழந்த நான்
அழிவில் மகிழ்ந்த நான்
அதனால் வாழ்ந்த நான்

உலகம் மறந்த நான்
உண்மை துறந்த நான்
பகையில் மகிழ்ந்த நான்
கனவில் மிதந்த நான்

யதார்த்தம் தொலைத்த நான்
ஈழத்தின் சாபமே நான்
இன்னும் மறுப்பேன் நான்
இருப்பை அழிப்பேன் நான்

அனுமானாய் வந்த நான்
அழிக்கவே தெரிந்த நான்
இரணத்தை இரசிப்பவன் நான்
உன்னிரத்தம் குடிப்பேன் நான்

6 மே, 2010

மன்னிப்பு...

சிங்களதேசமே
வென்றுவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்.
சிங்களதேசமே
தமிழரின் சுகந்திர
தாகத்தை கொன்றுவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்

ரோம சாம்பிராச்சியம்
வெற்றிகளைத்தான்
கண்டது
மனிதத்தில் மட்டும்
மரித்துப் போனது

பெளத்தம் தானம் கேட்டது
தமிழரின் இரத்தத்தை
எப்போது கேட்பதாகச்
சொன்னது சகோதரா?

நீங்கள் இறுமாந்து
இருக்கிறீர்கள்
உங்கள் வாரிசுகள்
வருங்காலத்தில்
தலைகுனிவார்கள்

கொடுப்பதில் மகிழ்வுற
முடியாத நீங்கள்
புத்தரை அழைத்துவந்து
கேளுங்கள் இரத்தம்தான்
அவனுக்குத் தானமாக வேண்டுமா
என்று?

மனிதம் பேசிய மகானின்
சீடர்கள் மனிதத்தைத்
தொலைத்த பின்பு
நடைப்பிணமாக
இலங்கையின்
மக்களாகி விட்டீர்கள்.

நீங்கள் பலயுகங்கள்
கழிந்தபின்பு தேடப்போவதை
நான் இன்று புரிந்து கொண்டேன்.
சகோதரா! நம்மினம் இழைத்த
பிழைகளை மன்னித்து விடுங்கள்
நீங்கள் அந்த மகானின்
வாரிசுகளாய் இருந்தால்.