23 மே, 2010

அசுரப் போராட்டம்

ஆயிரம் மெழுகுவர்த்திகள்
மெளனமாகக் கரைந்தன
ஆயிரமாயிரம் உயிர்களைப்
பாசிசம் குடித்தது

ஒரு அசுரனைக்கண்டு
நாம் தெய்வத்திடம் ஓடாது
மறு அரசனை அழைத்துவந்து
மரணம் படைத்தோம்

சிறு தெய்வங்களை
அசுரன் கொன்றபோது
நாம் சிலாகித்து நின்றோம்

எதிர்த்தவரை
சுடலைச் சாம்பலில்
புரளுபவனின் சுற்றத்தார்
பித்தர்கள் என்றோம்

சுற்றம் விட்டு
நவீன சுடலை நோக்கி
ஓடுங்கள் எனக்
கட்டளை இட்டோம்

மிஞ்சியவரை எரித்து
சாம்பலாக்கி வந்து
புரளுங்கள் என்றோம்

எங்கள் கண்கள்
நியாய அநியாயத்தை
புறம்தள்ளி இலட்சியத்தை
மட்டுமே பார்த்ததென்றோம்

மண்ணை மீட்கப்
பதறிய நாங்கள்
மனங்களை மாத்திரம்
தொலைத்து வந்தோம்

அசுரனிடம் நியாயம்
கேட்டவரை எண்ணி
கடவுளும் நிரந்தரமாக
கண்மூடி இருந்தார்

பணத்திற்காக கோசம்
போட்டவர்களை இனத்திற்கான
தேச பிதாக்களாக
உருவகித்தோம்

பேசிய குரல்வளைகளை
அறுத்து எறிந்தோம்
மாற்றுக் கருத்தை
துரோகிகளாக்கி னோம்

பேசியது துரோகம்
இல்லை பேச்சை
நிறுத்தி வைத்தது
துரோகம் என்பது
புரியாது இருந்தோம்

மனிதர்களை ஓமகுண்டத்தில்
தள்ளிய அசுரர்களின் போராட்டம்
முடிந்தபோது கோவணமும்
இல்லாத எம்மினத்தின்
கண்ணீரில் வியாபாரம்
நடத்தும் நாடுகடந்த
தமிழர்கள் ஆகினோம்

நீங்கள் கண்ணீர்விடுவதாக
வியாபாரம் செய்கிறீர்கள்
எங்கள் கண்களில்
எப்போதும் இரத்தம்தான்
வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக