25 டிசம்பர், 2010

சைவமும் தமிழும் வளர்ப்போம் வாரீர்!

ஊரெல்லாம் வீடுகள் இருந்தது
வீடெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள்
தேர்முட்டியில் ஆட்கள் இருந்தார்கள்
திருவிழாக்களில் கூட்டம் இருந்தது.
நாடுமாற நாங்கள் திசைமாறி வந்தோம்.
ஊரெல்லாம் வீடுகள் இருக்கிறது
வீடுகள்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது
சிலவீடுகள் கூரையில்லாது தவிக்கிறது
சிலவீடுகள் சுவருடைந்து தவிக்கிறது
சிலவீட்டில் காட்டாக்காலி வாழ்கிறது
வேலிகள் இல்லாது வளவுகள் தவிக்கிறது
துகில் போனபின் அது அம்மணமாய் துடிக்கிறது
வாடகை கொடுத்துக் குடியிருந்தார் அப்பொழுது
வருமானம் வேண்டிக் குடியிருக்கிறார் இப்பொழுது
காலம் மாறி இருக்கிறது.
கனடாவுக்கு கதைத்து முடிவெடுக்கிறார்.
ஆண்டவனைத் துாக்குவதற்கே
ஆள்பிடிக்கப் அலைகிறார்கள்.
அகப்பட்டால் அவர் சகடையில் ஊர்வலம்
அன்றேல் ஐயர் தனியச் சுமக்கும் கேவலம்
கொழும்பு வாசிகள் ஆனதமிழரே
கொஞ்சமும் வெட்கப்படாதீர்
நான் உங்களைச் சொல்லவில்லை
எனக்கு அந்தத் தார்மீக பலமும் இல்லை.
நாங்கள் சீமையிலே கோயில்கட்டி
சிங்காரித்து அவரைத்துாக்கி
சங்கங்கள் அமைத்துச்
சைவமும் தமிழும் வளர்ப்போம் வாரீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக