25 டிசம்பர், 2010

எங்கள் நீதி

வெள்ளி நட்சத்திரங்கள் தவறிவிழுந்து பூமியெங்கும் மினுங்குகின்ற கடும் குளிர்காலம்... ஆவிவிடும் துவாரங்களை மனிதனில் கண்டு பிடித்து வெப்பத்தைக் குளிர் அட்டையாக உறிஞ்சும் அவஸ்தை. அட்டையான குளிரை எதிர்த்துப் பனியுலகில் மனிதவாழ்வைக் காப்பாற்ற அவன் கட்டிய வீடுகள் அவனுக்காகப் போராடும்.

நந்தினி தன்னை நன்கு அலங்கரித்து இருந்தாள். நந்தினியின் அப்பாவும், அம்மாவும் நன்றாகத் தங்களை அலங்கரித்து இருந்தார்கள். அவர்கள் மருமகனை முதன் முதலாகப் பார்க்கப் போகும் சந்தோசத்தில் இருப்புக் கொள்ளாது அலைந்தார்கள். தங்கள் மகனை நினைத்தபோது அவர்களுக்கு ஒருமுறை நெஞ்சில் நெருப்பை கொட்டியது போன்று இருந்தது. அந்த நினைவுகள் கொடுமையானவை... வன்மையானவை... இன்றும் நினைவைவிட்டு அகலாது நிலைத்திருப்பவை...

நீலனை எண்ணும்போது நந்தினிக்கு ஒருவித போதை சட்டென மூளையில் பாய்கிறது. அவன் கண்கள் பார்வையில் மது ஊட்டி எப்போதும் இடைவிடாது கள்வெறி கொள்ள வைக்கிறது. முதல்நாள் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் கண்டபோதே அவளால் அந்தப் பார்வையைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதற்கு முன்பு ஆயிரம் ஆண்களை, அவர்களது கண்களை அவள் பார்த்து இருக்கிறாள். பல இடங்களில் வேலையும் செய்து இருக்கிறாள். யார்மீதும் அப்படியொரு கவர்ச்சியும், காதலும் அவளுக்கு உண்டானது இல்லை. அன்று அவனைப் பல்கலைக்கழகத்தில் கண்டபோது... கைகுலுக்கியபோது... கதைத்தபோது... மனது எங்கோ ஆகாயத்தில் பறந்தது. இமைகள் நிலையின்றி வெட்டிய வண்ணம் இருந்தன. கன்னத்தால் சூடுபறக்கும் ஒருவித வெட்கத்தை முதல் முறை உணர முடிந்தது. கால்கள் தரையில் இருப்பதை நினைவுகள் மறுத்து நின்றன. அவனைப் பார்க்கக்கூடாது என்று திருப்பிய பார்வையைப் பலகணங்கள் நிலையாக வைத்திருக்க முடியாது; தோல்வி எப்போதும் தாக்கியது. காதலா... கவர்ச்சியா... அல்லது இரசாயனங்களின் ஒற்றுமையா... இருவரையும் ஏதோ ஒன்று இணைத்தது. சேர்ந்து கதைக்க... சப்பாட்டிடைவேளைகளைக் கலகலப்பாகக் கழிக்க... அப்போது ஆளையாள் இரசிக்க...

ஒன்று மாத்திரம் அவனிடத்தில் அவளுக்குப் பிடிப்பதில்லை. அநேகரின் புரிதல் அப்படிக் கோணலாய் இருப்பது அவள் மனதை அடிக்கடி துன்புறுத்தும். ஒருமுறை அவன் அதைப்பற்றிக் கதைக்கும்போது அவள் வேதனையோடு மௌனமாக இருந்தாள். வாய்திறக்க வேண்டும் போல இருந்தது. வரும் சொற்கள் நிட்சயம் தங்கள் உறவைச் சுட்டுவிடும் என்பதை அறிந்து அடங்கிப் போனாள். பின்பு வீட்டிற்கு வந்து 'அண்ணா உன்னை அவமானப்படுத்தியதற்காய் மன்னித்துவிடு' என அவன் படத்திற்கு முன்னால் நின்று அழுதாள்.

அவளுக்கு இன்றும் அண்ணாவின் நினைவாகவே இருந்தது. 'இன்று அவன் இருந்திருந்தால்... அண்ணா, அண்ணி, அவர்கள் பிள்ளைகளென எவ்வளவு சந்தோசமாய் இருந்திருக்கும்? கொள்ளி வைப்பதற்குகூடப் பிள்ளை இல்லை என்பதில் அப்பா எவ்வளவு ஒடிந்து போய் இருந்தார். நடைப்பிணங்களாக இருந்த அம்மாவும் அப்பாவும் இப்போது சற்று அதை மறந்து இருக்கிறார்கள். இப்படி ஒரு நிகழ்வு நடக்கும்போது அண்ணன் இருந்து அதிகாரம் பண்ணியிருக்க வேண்டும். எல்லாம் அநியாயமாகப் பறிக்கப்பட்டு விட்டது ' இந்த நினைவு இதயத்தில் குண்டூசிகள் ஏறியதான வேதனை தந்தது.

'அண்ணன் ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது அப்பா அவனோடு கதைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் 'பல எலி சேர்ந்தாப் புத்தெடுக்காது தம்பி' எனத் தனது பழமொழி அறிவை அவனிடம் காட்டினார். அதற்கு அவன் 'ஆர்குத்தினாலும் அரிசியானால் சரியப்பா' என்றான். அதற்கு மேல் அப்பாவிடம் இருந்து பழமொழி வரவில்லை. 'அது எங்கயடா நீங்கள் சேர்ந்து குத்தப் போறியள்?' என்றார் சலிப்போடு. 'அது நடக்கும் அப்பா. நாங்கள் எல்லாரும் ஒரே நோக்கத்திற்குத்தானே போயிருக்கிறம். நிட்சயமாக எல்லாத் தலைவர்களும் அதைப் புரிஞ்சு கொண்டு சேருவாங்கள் அப்பா. சகோதரங்களுக்க அடிபட்டு சாகமாட்டம் எண்டு எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு அப்பா' என அதீத நம்பிக்கையோடு கூறிவிட்டுச் சென்றான். அந்த அண்ணனை அப்பா பத்துநாள் கழித்துப் பைத்தியகாறன் போல் தேடித் திரிந்தார். 'எங்க எரிச்சியள்? தயவு செய்து இடத்தைக் காட்டுங்கோ' என்று கேட்டவரைத் துாசனத்தால் பேசி, சேட்டைக் கிழித்து 'இனியும் நின்றால் சுட்டுத் தள்ளுவோம் ' என வெருட்டி அனுப்பி வைத்து இருந்தார்கள்'.

'மருத்துவராய் இருந்த அப்பா அன்றோடு நடைப்பிணமானார். மருத்துவரான அப்பாவைக் குணப்படுத்த பெரியப்பா பல மருத்துவர்களைத் தேடி அலைந்தார். அவரது அன்பில் அப்பா பையித்தியம் ஆகாத பாக்கியம் கிட்டியது. அதன் பின்புதான் இனி இந்த நாடே எங்களுக்கு வேண்டாம் எனப்புறப்பட்டு இங்கு வந்து குடியேற வேண்டியதாயிற்று ' என்கின்ற பழைய கதையை மீண்டும் எண்ணிக் கொண்டாள். அவளுக்கு காலம் முடிவு என்கின்ற புள்ளி தெரியாது ஓடிக் கொண்டே இருக்கின்றது என்பதாய் இருந்தது. அது பல தீர்ப்புக் கூறிவிட்டாலும் சிலமனிதர்களை மாற்றத் தவறிவிட்டதாய் இருந்தது.

ஐந்தரைக்கு வருவதாய் கூறிய நீலன் செரியாக ஆறுமணிக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினான்.
'வாங்கப்பா' என்றவண்ணம் நந்தினி கதவைத்திறந்து ஜக்கெற்றை வேண்டிக் கொழுவினாள்.
'அந்த எருமை ஒண்டு ரெலிபோன் எடுத்து அலம்பிக் கொண்டு இருக்குது. பழசை இன்னும் மறக்காமல் இப்ப நடந்த அநியாயத்தோட போட்டுக் குளப்பிக் கொண்டு நிக்கிறான்.'
'எப்ப நடந்தாலும் அநியாயம் அநியாயம்தானே அப்பா'
'இப்ப... உலகம் பார்த்துக் கொண்டு இருக்க... சரணடையச் சொல்லி போட்டு... சுட்டுக் கொண்டதுக்கும் ; அப்ப ஒரு காலத்தில எதிராளியாய் இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கப் போறாங்கள் எண்டதால சுட்டுக் கொண்டதுக்கும் முடிச்சுப் போடலாமே?' நந்தினி இதற்குப் பதில் சொல்லக்கூடாது என்றுதான் இருந்தாள். பதிலா? உறவா என்பதில் அவள் பரிதவித்தாள்.
'ம்... சொல்லு பார்ப்போம்' என்கின்ற அவனின் வற்புறுத்தல் அவளின் அந்த மௌனத்தைச் சிதறடித்தது.
'காட்டிக் கொடுத்திடுவாங்கள் எண்டு அவையச் சுட்டவை பிறகு பிரேமதாஸாவோட என்ன செய்தவை? அண்ணன்தம்பியக் கொலைசெய்யப் பார்த்துக் கொண்டு இருந்த எங்களுக்கு மாற்றான் செய்தா மட்டும்தான் ரோசம் வருகுது. எந்தக் கொலையையும் நியாயப் படுத்தேல்லாது அப்பா. கொலைகளில் இரத்தமும் வன்முறையும் தான் கூத்தாடும். அங்கு மனிதம் மரித்துப் போவதுதான் உண்மையப்பா. அதை நான் செய்தாலும் செரி. நீங்கள் செய்தாலும் செரி. வருத்தமாக் கிடந்தவையச் சுட்டு எரிக்கிறதில எந்தவித மனிதநேயம் இருக்கும் எண்டு நீங்கள் நினைக்கிறியள்? அப்ப மௌனமாய் இருந்தவைக்கு இப்பமட்டும் ஏன் அதீதமாய்க் குரல் வரோணும்? இந்த நேரத்திலயாவது நாங்களும் பிழைவிட்டம் எண்டதை ஏன் திரும்பிப் பார்க்ககூடாது? இந்த ஆர்பாட்டம்கூட எங்கட உரிமையைப் பெறுவதற்கான ஆர்பாட்டமா இருக்குதா அல்லது போராட்டத்தை வியாபாரம் செய்து வந்தவையின்ர பழிவாங்கிற கோசமா இருக்குதா? நீங்க சொல்லுங்க பாப்பம்' என்றாள்.

நீலன் இந்த விளக்கத்தை எதிர்பார்க்கவில்லை. நந்தினி இந்த விடயத்தில் தன்னை எதிர்த்துக் கதைப்பாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. திடீர் அதிர்ச்சி மட்டுக்கு மீறிய கோபத்தை அவனுக்கு உண்டுபண்ணியது. அந்தக் கோபத்தில் வார்த்தைகள் அவன் கட்டுப்பாட்டை புறக்கணித்தன.
'ஓ நீ துரோகியின்ர தங்கச்சிதானே! இப்பிடித்தான் கதைப்பாய்' அவன் கேள்விக்குப் பதில் சொல்லாது அவளை நேரடியாகத் தாக்கினான். பின்பு தனது பிழையை எண்ணி நாக்கைக் கடித்துக் கொண்டான்.

நந்தினிக்கு உடல் எல்லாம் பற்றி எரிந்தது. கோபத்தில் கண்கள் சிவக்கக் காளியனாள். தன்னை இளந்தவளாய் ஓங்கி நீலனின் கன்னத்தில் அறைந்தாள். கையைக் காட்டி 'வெளியால போ' என உரத்த குரலில் கோபமாகக் கத்தினாள்.

நீலன் சற்று அதிர்ந்து போய்விட்டான். பின்பு அவமானப் பட்டவனாய் கோபத்தோடு வெளியேறினான்.

'ஏன்னம்மா அவசரப்பட்டனீ ' அப்பா ஆதரவாய் அவளைக் கேட்டார்.
'நான் இவ்வளவுநாளும் அவன்கருத்தும் என்கருத்தும் சில விசயத்தில ஒத்துப் போகாது எண்டு நினைச்சு இருந்தன் அப்பா. இண்டைக்கு தான் தெரிஞ்சுது, அவன் கருத்து என்கருத்திற்கு எதிர்திசையிலதான் எப்பவும் பயணிக்கும் எண்டு'

அப்பாவிடம் இருந்து வந்த ஆயிரம் வேதனைகளைத் தாங்கிக் கொள்ளும் ஒரு பெருமூச்சு நந்தினியைத் தாண்டி எங்கோ சென்று கொண்டு இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக