15 டிசம்பர், 2010

இனி மெல்லச் சாகும் தமிழ்

'இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்' என்பது முகப்புத்தகத்தில் அதிகம் பாவிக்கப்படும் ஒரு மேற்கோள். நான் ஏதிர்வினையாக எண்ணுவதாய் நீங்கள் சிந்திக்க வேண்டாம். என்மனதிற்குள்ளும் 'இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்' என்றே ஆகவேண்டும் என்பதே அடங்காத ஆதங்கமாக இருக்கிறது. ஆதங்கங்களோ, கற்பனைகளோ, வீரவசனங்களோ, யதார்த்தங்கள் ஆவதில்லை. ஈழத்தமிழராகிய நாங்கள் மோட்டுச் சிங்களவரென அறியாமையில் வீரம் பேசிநின்றோம். அவர்கள் எங்களை அரசியலில், இராணுவத்தில் படுகிடையாக்கியபோது வாயடைத்து நிற்கிறோம். நடைமுறை யில்லாத கற்பனா வாதங்களால் எங்களுக்கு நாங்களே தாராளமாகக் குழிவெட்டிக் கொள்ளமுடியும். அதைவிட உருப்படியாக எதையும் செய்ததாக இல்லை என்பது நிதர்சனம். பிரச்சனை இருக்கிறது என்கின்ற போதுதான் அதற்கு மருந்து கொடுக்க முயற்சிக்கலாம். வருத்தத்தை வைத்துக் கொண்டு எனக்கு வருத்தமே இல்லை என்றால் மருந்து கொடுக்க முடியாது. மரணம்தான் அவனை அரவணைக்க முடியும். 'இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்' என்பது மருந்து வேண்டாம் என்று அடம்பிடிப்பது போல் இருக்கிறது.

தமிழின் பிறப்பிடமான தாய்த் தமிழ் நாட்டில் நான் வாழ்ந்தபோது முத்திரை அரிசி என்பனவற்றை தமிழில் கூறி, அவமானப்பட்ட அனுபவங்கள் உண்டு. 'றைஸ் என்று தமிழில் சொல்லையா' என்கின்ற போது வேட்டி உரிந்த வெக்ககேடாய் இருந்தது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த எம்மினம் அவர்களை மேன்மையானவர்களென எண்ணி, அவர்கள் கூறுவது எல்லாம் செரி, செய்வது எல்லாம் செரி என்கின்ற அடிமை மனப்பாண்மையில் அழுந்திக் கிடக்கின்றனர். அதுவே ஆங்கிலத்திற்கு நாங்கள் அடிமையாவதை ஊக்கிவித்தது.

ஆங்கிலம் ஒரு மொழி. அது இரண்டாவது மொழியாக எமக்குத் தேவைப்படுகிறது. அது சிலவேளைகளில் மற்றைய மனிதர்களோடு தொடர்பு கொள்வதற்கோ, அல்லது எமது மொழியில் இல்லாத அறிவு நூல்களை வாசிப்பதற்கோ உதவி செய்கிறது. ஆங்கிலத்தை நோர்வேயிலும் படிக்கிறார்கள். அழகாகப் பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம் எனத் தெளிவாகப் பிரித்து, ஆழமாகக் கற்கிறார்கள். அதைத் தேவையானபோது பயன் படுத்துகிறார்கள். அதற்காக அதில் மோகம் கொண்டு, தங்கள் சொந்த மொழியைத் தொலைக்கும் அறிவீனம் அவர்களுக்கு இல்லை. சில பயன்பாட்டிற்கான மொழி வேறு, தாய் மொழி வேறு என்பதில் அவர்கள் நன்கு தெளிவாக இருக்கிறார்கள். வீட்டில் ஆங்கிலம் பேசுவதால் சமூக அந்தஸ்து கிடைக்கும் என்கின்ற போலிக் கௌரவத்தில் அவர்கள் வாழ்வதில்லை.

தமிழரின் அடிமைவிசுவாசம் ஆங்கிலத்தின்மீது அதீதமாய் இருக்கிறது. பயன் பாட்டிற்கு மாத்திரம் பாவிக்க வேண்டிய மொழியை, அடிமை மோகத்தால் தாய்மொழியாக்கும் அவலம் அரங்கேறுகிறது. ஒருவன் தமிழ்நாட்டில் இருந்தாலும், வீட்டிலே அனைவரும் ஆங்கிலத்தில் கதைத்தும், எழுதியும் வந்தால் அவர்கள் தாய்மொழி எது? அல்லது ஒரு பிள்ளை ஆங்கில மொழியில் மாத்திரம் பாடங்களைத் தனது பாடசாலையில் பயின்று வந்தால் அவனது எண்ண உருவாக்கம், எழுத்து உருவாக்கம் எந்த மொழியில் வரும்? அவனுக்கு பின்வரும் சந்ததிகள் எந்த மொழியில் அதைச் சிந்திப்பார்கள்? இன்றைய தமிழ்நாட்டில்
பெருமளவில் ஆங்கிலத்தில் எழுதி, ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பயன்பாட்டு மொழியாக வைத்திருக்க வேண்டியதைத் தாய் மொழியாக்கி, தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறார்கள். இங்கே நோர்வே மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால், எந்த மொழிக்கு எந்த இடம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற தெளிவு நோர்வே மக்களிடம் இருக்கிறது. தமிழர்களிடம் அது பொதுவாக இல்லை. நாலுமில்லியன் மக்கள் பேசும் நோர்வே மொழி வாழ்வதற்கு தமிழைவிட நிறையவே சந்தர்ப்பம் உண்டு. ஒன்று மக்களிடம் இருக்கும் மொழிபற்றிய தெளிவு. இரண்டு அந்த மொழிக்கான ஒரு நாடு. இவை இரண்டும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. எழுபது மில்லியன் மக்கள் பேசும் தமிழ் அழிந்து போகலாம். அதற்கென்று ஒரு நாடும் இல்லை. அவர்களிடம் மொழியின் பயன்பாடு பற்றிய தெளிவும் இல்லை. இந்த இரண்டுமே இல்லாது, தமிழில்படிப்பதே அவமானம் என்கின்ற தமிழ்நாட்டில், தமிழ் இப்போதே திரிந்து தங்கிலீசாய் மாறிவிட்ட ஒரு நாட்டில், இந்தியிலும் ஆங்கிலத்திலும் மோகம் கொண்டுவிட்ட ஒரு நிலையில், அங்கு மகாநாடுகளில் மட்டும் சிலகாலம் தமிழ் வாழலாம். இன்னும் ஒரு இருபது வருடங்களில் தமிழ்நாட்டில் தமிழைவிட ஆங்கிலத்தில் அதிக புத்தகங்கள் வெளி வரலாம். தனக்கு மிகவும் பரீட்சயமான மொழியில்தானே மனிதனால் சிந்திக்கவும் எழுதவும் முடியும்?

இலங்கையில் சிறுபாண்மை மொழியான தமிழ் சிங்கள மயமாக்கப்படுவதோடு, தமிழர்களின் பொருளாதார நாடோடி மனப்பாண்மையால் வேற்று நாடு சென்று அவர்கள் குடியேறுதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அத்தோடு இலங்கையின்
இன முரண்பாடு தொடர்ந்து கொண்டு இருப்பதால் தமிழன் இருப்பை அது அங்கு கேள்விக் குறியாக்குவதோடு, இருப்பவர்களும் சிங்களமயமாதலை தடுக்க முடியாது போய்விடப் போகிறது. 'மைக்ரோ' சிறுபாண்மையாக இருந்து கொண்டு தமது மொழியைத் தக்கவைத்துக் கொள்வது ஒன்றும் நடமுறைச் சாத்தியம் அல்லாது போகும். இனிச் சிங்களம் படித்தால்தான் வாழ்வு உண்டு என்கின்ற இயலாமைக்கு அங்கே அடக்குமுறைகள் வழிகோலிக் கொண்டு இருக்கிறது. தமிழில் படிப்பதோ கதைப்பதோ அவர்கள் நடமுறை வாழ்க்கையில் சிக்கல்களை உண்டுபண்ணிக் கொண்டே இருக்கிறது.

புலம் பெயர்ந்தவர்கள் எப்போதும் தங்கள் மொழியை இழப்பது மாற்ற முடியாத நியதியாகும். வந்தேறு குடிகளின் முதலாவது பரம்பரை போற்றும் மொழி இரண்டாவது அல்லது மூன்றாவது பரம்பரையில் முற்றும் மறக்கப்பட்டு விடும். இன்று நோர்வேயில் வாழும் பிள்ளைக்கு நோர்வேமொழிதான் தாய் மொழியே தவிரத் தமிழ் மொழி இல்லை. தமிழ் பேசி அவர்கள் விளங்கிக் கொண்டாலும் பதில் மட்டும் நோர்வே மொழியில் வருகிறது. இவர்களின் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இனியாவது தழிழைக் காப்பாற்ற வேண்டும் என்றால், ஆங்கில மொழியின் பயன்பாடு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்கின்ற தெளிவான அறிவை மக்களுக்கு ஊட்டி, 'இனி மெல்லத் துளிர்க்கும்' என்கின்ற கனவை நிறுத்தி, 'இனி மெல்லச் சாகும் தமிழ்' என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு எதிராக என்ன செய்ய முடியும் என்பதைப் சிந்திக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக